பேஸ் புக் சமூக வலையமைப்பு ஊடாக அவதூறு ஏற்படுத்தினால் வழக்குத் தொடர்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மற்றும் இணைய தளங்களின் ஊடாக தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு அவதூறு பிரசாரங்கள் தொடர்பில், அமைச்சிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
தொழில்நுட்ப அபிவிருத்தி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளினால் முழு உலகமுமே பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றன. தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சுறு ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.
எனினும், பேஸ் புக் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை.
எனவே விரைவில் இவ்வாறு பேஸ் புக் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை தடுக்கவும் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.