கொழும்பு: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
4-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அக்டோபர் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.
`ஏ` பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், `பி` பிரிவில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளும் `சி` பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளும், `டி` பிரிவில் பாகிஸ்தான், நிïசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர்-8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த உலக கோப்பையில் மொத்தம் 27 ஆட்டங்கள் நடக்கின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியம், பல்லகெலே ஸ்டேடியம், ஹம்பன்டோட்டா மைதானம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.
"சி' பிரிவில் இன்று நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. இலங்கை அணியைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கைகொடுக்கும். சமீபத்தில் இலங்கை பிரிமியர் லீக் தொடரில் விளையாடி இருப்பது அதிக நம்பிக்கை அளிக்கும்.
பேட்டிங்கில் தில்ஷன், சங்ககரா, கேப்டன் மகிளா ஜெயவர்தனா நம்பிக்கை அளிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்களாக மாத்யூஸ், திசாரா பெரேரா சாதிக்கலாம். வேகத்தில் அசத்த லசித் மலிங்காவுடன், நுவன் குலசேகரா, ஷமிந்தா எரங்கா உள்ளனர். சுழலில் அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ், ஹெராத் கைகொக்கலாம். இவர்களை தவிர திரிமன்னே, தில்ஷன் முனவீரா, அகிலா தனன்ஜெயா, தினேஷ் சாண்டிமல் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.
"டுவென்டி-20' அரங்கில் ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 20 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 16 போட்டியில் தோல்வி, ஒரு போட்டி டை ஆனது. உலக கோப்பை தொடரில் விளையாடிய நான்கு போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. மூன்றில் தோல்வி அடைந்தது.
பேட்டிங்கில் மசகட்சா, கேப்டன் பிரண்டன் டெய்லர், சிபாபா, சிகும்புரா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் உட்சேயா, சிகும்புரா, பிரைஸ், ஜார்விஸ், கிரிமர், மபோபு ஆகியோர் அசத்தும் பட்சத்தில் ரன் வேட்டையை தடுக்கலாம்.
ஜிம்பாப்வே அணி அதிக தோல்விகளை பெற்றிருந்த போதிலும், 2007ல் கேப்டவுனில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அலை ஏற்படுத்தியதை இலங்கை வீரர்கள் மறக்க மாட்டார்கள்.
வழக்கமாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு ஆடுகளங்களும் வித்தியாசமாக இருக்கும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:- ``கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹம்பன்டோட்டாவில் காற்றின் தாக்கம் இருக்கும். பல்லகெலே ஆடுகளத்தில், வேகப்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் பந்து நன்கு ஸ்விங் ஆகும். கொழும்பு பிரேமதாசா ஆடுகளம் பேட்டிங்குக்கு சிறப்பு வாய்ந்தது. இப்படி ஒவ்வொரு மைதானத்திலும் ஒவ்வொரு வகையான சவால்கள் நிறைந்துள்ளன. அவற்றுக்கு ஏற்ப நம்மை தயார்ப்படுத்தி கொள்வது முக்கியம். இது ஆட்டத்திலும் சுவாரஸ்யத்தை உருவாக்கும்`` என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதை மற்ற அணிகளும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.